முக்கிய செய்திகள்
 

கீழே உள்ள செய்திகளை பாருங்கள்

பாகிஸ்தானில் ஆட்சியை கைப்பற்ற ராணுவம் முயற்சி?

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், பிரதமர் பதவியை நவாஸ் ஷெரீப் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, எதிர்க்கட்சி தலைவர் இம்ரான் கானும், மதகுரு காதிரியும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, அரசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ராணுவம் நேற்று முயற்சிகளை தொடங்கியது. இதற்கு இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்து நவாஸ் ஷெரீப் கூறுகையில், “தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண உதவுமாறு, ராணுவத்தை நான் கேட்கவில்லை என்றார். மதகுரு காதிரி கூறுகையில், பிரச்னைக்கு தீர்வு காண நவாஸ் ஷெரீப் தான் ராணுவத்தை அழைத்துள்ளார் என்று குற்றம் சாட்டினார்.பாகிஸ்தானின் அரசியல் நெருக்கடிகளை பயன்படுத்தி, ஆட்சியை ராணுவ தளபதி கைப்பற்றலாம் என்று பேசப்படுகிறது.

எலக்ட்ரிக்கில் இயங்கும் அதிவேக சூப்பர் பைக்

ஜப்பானை சேர்ந்த டெர்ரா மோட்டார்ஸ் நிறுவனம் அதிவேக எலெக்ட்ரிக் சூப்பர் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. கிவாமி என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய சூப்பர் பைக் 1,000 சி.சி பைக்குகளுடன் போட்டி போடும். கிவாமி சூப்பர் பைக்கில் 13.41 பி.எச்.பி ஆற்றலை வெளிப்படுத்தும் மின்மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்வதற்கு 6 மணி நேரம் பிடிக்குமாம். ஆனால், ஒருமுறை சார்ஜ் செய்தால் 2,00 கிமீ வரை செல்ல முடியும் என்கிறது டெர்ரா மோட்டார்ஸ். இதன்மூலம், இந்தியாவின் அதிக சார்ஜ் ரேஞ்ச் கொண்ட இருசக்கர வாகனம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. மணிக்கு 160 கிமீ வேகத்தில் இந்த பைக் செல்லும் வல்லமை கொண்டதாக டெர்ரா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இந்த பைக் இந்திய சாலை நிலைகளுக்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பை பெற்றிருக்கிறது. ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்து இந்த புதிய பைக்கை விற்பனைசெய்ய இருப்பதாக டெர்ரா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில் இந்த புதிய சூப்பர் பைக்கின் விற்பனை துவங்க உள்ளதாக டெர்ரா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. ரூ.18 லட்சம் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையில் கிவாமி எலெக்ட்ரிக் சூப்பர் பைக் கிடைக்கிறது. இந்த புதிய கிவாமி எலெக்ட்ரிக் சூப்பர் பைக்கை தவிர்த்து, புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும், புதிய எலெக்ட்ரிக் 3 சக்கர வாகனத்தையும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்க இருப்பதாக டெர்ரா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

வானில் நாளை 2 நிலா: நெட்டில் பரவும் வதந்தி

சென்னை: வானில் நாளை இரவு இரண்டு நிலா தெரியும் எனவும். செவ்வாய் கிரகம் மிக பெரிதாக தெரியும் எனவும் வலை தளத்தில் செய்திகள் உலா வருகின்றன. இது வெறும் புரளி, யாரும் நம்ப வேண்டாம் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: வானில் நாளை இரவு 2 நிலா தெரியும் என வலைதளத்தில் புரளி பரவி வருகிறது. இதுதொடர்பாக, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் புகைப்படங்களும் வெளிவந்துள்ளன. இவை வெறும் புரளிதான். இதை பொதுமக்கள் நம்ப வேண்டாம். செவ்வாயும் பூமியும் சூரியனை மையமாக வைத்து நீள்வட்ட பாதையில் சுற்றுகின்றன. இவ்வாறு ஒவ்வொன்றும் தன் பாதையில் கிரகங்கள் சுற்றி வரும் போது அவற்றுக்கு இடையே தொலைவு மாறி, மாறி அமையும். பூமிக்கும் செவ்வாய்க்கும் சராசரி தொலைவு 22.5 கோடி கி.மீ. மேலும் கிரகங்கள் சுற்றும் பாதை எப்போதும் ஒருபோல இருக்காது. நீள்வட்ட பாதையில் உள்ள தடுமாற்றங்கள் காரணமாக ஒவ்வொரு முறையும் அருகாமையில் வரும் போதும் பூமி, செவ்வாய் தொலைவு சற்றே கூடி குறையும். கடந்த 2003ம் ஆண்டு ஆக. 27ம் தேதி பூமிக்கும் செவ்வாய்க்கும் உள்ள தொலைவு 5.5 கோடி கிமீ ஆக இருந்தது. இதுதான் கடந்த 6 ஆயிரம் ஆண்டுகளில் மிக குறைவான தொலைவாக இருந்தது. அதுபோல் இரு கிரகங்களும் மிக அருகே வரும் நிலை மறுபடி 2287 ஆண்டில் தான் ஏற்படும். எனினும் இந்த நாட்களிலும் வெறும் கண்களுக்கு ஒளி புள்ளியாகதான் செவ்வாய் தென்படும். அறிவியல் பூர்வமற்ற விஷயங்களை நம்ப வேண்டாம்.

இந்தியாவில் வைரலாகும் ரைஸ் பக்கெட் சேலஞ்ச்

சில நாட்களாக இணையதளத்தில் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்ற வீடியோ வைரலாக பரவி வந்தது. ஏஎல்எஸ் நோய்க்கு நிதி திரட்ட ஆரம்பிக்கப்பட்ட சேலஞ்ச் சுய விளம்பரமாகவும், வைரல் பொழுதுபோக்காகவும் மாறியது. உலக பிரபலங்கள் தொடங்கி உள்ளூர் பிரபலம் வரை அனைவரது ஐஸ் பக்கெட் வீடியோக்களும் யூடியூபில் வழிந்தன. இந்நிலையில் இந்தியாவில் ரைஸ் பக்கெட் சேலஞ்ச் வைரலாக தொடங்கியுள்ளது.

யுஎஸ் ஓபன் டென்னிஸ் இவானோவிக் செரினா அபாரம்

நியூயார்க் : யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்றுக்கு இவானோவிக், செரினா வில்லியம்ஸ் ஆகியோர் முன்னேறினர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் ரோஜர் பெடரர் எளிதாக வெற்றி பெற்றார்.கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடக்கிறது. முதல் சுற்று போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தன. மகளிர் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர்-1’ வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் சக நாட்டவரான டவுன்சென்டை வீழ்த்தினார். 8ம் நிலை வீராங்கனையான இவானோவிக் 6-3, 6-0 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ரிஸ்கியை வென்றார்.மற்ற போட்டிகளில் 3ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் குவித்தோவா 6-1, 6-0 என்ற செட்களில் பிரான்சின் மிளாடெனோவிக்கையும், 7ம் நிலை வீராங்கனையான கனடாவின் பவுச்சர்ட் 6-2, 6-1 என்ற செட்களில் பெலாரசின் கோவர்ட்சோவாவையும், பெலாரசின் அசரன்கா 6-7, 6-4, 6-1 என்ற செட்களில் ஜப்பானின் டோயையும், ரஷ்யாவின் கஸ்னட்சோவா 6-3, 2-6, 7-6 என்ற செட்களில் நியூசிலாந்தின் எராகோவிக்கையும், இத்தாலியின் பென்னிட்டா 6-3, 4-6, 6-1 என்ற செட்களில் ஜெர்மனியின் கோயர்ஜெசையும் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-3, 6-4, 7-6 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் மடோசிவிக்கை எளிதாக வென்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 4ம் நிலை வீரரான டேவிட் பெரர் 6-1, 6-2, 2-6, 6-2 என்ற செட்களில் போஸ்னியாவின் ஜும்ஹரையும், பிரான்சின் மோன்ஹில்ஸ் 6-4, 6-2, 6-4 என்ற செட்களில் அமெரிக்காவின் டோனால்ட்சன்னையும், அமெரிக்காவின் இஸ்னர் 7-6, 6-2, 7-6 என்ற செட்களில் சக நாட்டவரான கிரோனையும் வென்றனர்.போபண்ணா தோல்வி: ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி ஏமாற்றமளித்தது. 13ம் நிலை ஜோடியான போபண்ணா, குரோஷி (பாகிஸ்தான்) இருவரும் முதல் சுற்றில் இத்தாலியின் பிராக்சியாலி, செப்பி ஜோடியை எதிர்த்து விளையாடினர்.பரபரப்பாக நடந்த இப்போட்டியில் போபண்ணா ஜோடி கடுமையாக போராடியும் 6-7, 6-4, 6-7 என்ற செட்களில் தோல்வி அடைந்தது.

75 பந்தில் சதம் விளாசல் தூள் கிளப்பினார் ரெய்னா

கார்டிப் : இங்கிலாந்தில் அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு கிடந்த இந்திய அணிக்கு புதுத்தெம்பு ஊட்டியுள்ளார் சுரேஷ் ரெய்னா. 2வது ஒருநாள் போட்டியில் அபாரமாக ஆடிய அவர் 75 பந்தில் சதம் விளாசி அமர்க்களப்படுத்தினார். இந்திய அணி 50 ஓவரில் 304 ரன்கள் குவித்தது.இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. இந்நிலையில், 2வது போட்டி கார்டிப் நகரில் உள்ள சோபியா கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் குக் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷிகர் தவான், ரோகித் சர்மா துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.டெஸ்ட் தொடரில் பெற்ற அடுத்தடுத்த தோல்விகளால் நம்பிக்கை இழந்து காணப்படும் இந்திய அணி நேற்றைய ஒருநாள் போட்டியிலும் ஆரம்பத்தில் தடுமாறியது. தவான் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். வழக்கம் போல இப்போட்டியிலும் கோஹ்லி ரசிகர்களை ஏமாற்றினார். 3வது பந்திலேயே இவர் ஆட்டமிழந்து வெளியேறினார். 19 ரன்னில் 2 விக்கெட் என்ற நிலையில், ரோகித், ரகானே ஜோடி சேர்ந்தனர். இவர்கள் பொறுமையாக ஆடி அணிக்கு நம்பிக்கை அளித்தனர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்த நிலையில் ரகானே 41 ரன்னில் (47 பந்து) ஆட்டமிழந்தார். இவரை வெளியேற்றிய டிரெட்வெல், அரை சதம் அடித்த ரோகித் சர்மாவையும் (52 ரன்) அவுட்டாக்கினார். 5வது விக்கெட்டுக்கு அதிரடி வீரர்களான ரெய்னா, கேப்டன் டோனி ஜோடி சேர்ந்தனர். இருவருமே ஆரம்பத்தில் இருந்தே அபாரமாக ஆடினர்.பந்துகளை வீணடிக்காமல், சரியான பந்துகளை பவுண்டரிக்கு விளாசினர். குறிப்பாக ரெய்னா தூள் கிளப்பினார். 49 பந்தில் அரைசதம் அடித்த அவர், பின்னர் அதிரடியை தொடங்கினார். சிக்சர், பவுண்டரிகளை விளாசி 74 பந்தில் சதம் (12 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். ஒருநாள் அரங்கில் ரெய்னாவின் 4வது சதம் இது. இங்கிலாந்துக்கு எதிராக அவர் முதல் முறையாக சதம் அடித்துள்ளார். ஆனாலும் அடுத்த பந்திலேயே ரெய்னா ஆட்டமிழந்தார். மறுமுனையில் கேப்டன் டோனி தனது 55வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இவர் 55 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைசியில் 50வது ஓவரில் அஸ்வின் 2 பவுண்டரிகளை விளாச இந்திய அணி 300 ரன்களை தாண்டியது. 50 ஓவர் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்தது. அஸ்வின் 10, ஜடேஜா 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஓகெஸ் 4, டிரெட்வெல் 2 விக்கெட் வீழ்த்தினர். 305 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து அணி களமிறங்கியதும் மழை குறுக்கிட்டது. இதனால், 47 ஓவரில் 295 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றப்பட்டது. பந்துவீச்சிலும் இந்திய அணி அசத்தியது. குக் (19), பெல் (1) இருவரையும் முகமது சமி வெளியேற்றினார். ரூட் (4) புவனேஸ்வர் வேகத்தில் வெளியேறினார். 16 ஓவர் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 67 ரன் எடுத்திருந்தது.

328 ரன் சேஸ் செய்து தென் ஆப்ரிக்கா அபார வெற்றி

ஹராரே : ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஜிம்பாப்வேயில் நடக்கிறது. நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 327 ரன்களை குவித்தது. பிஞ்ச் 102 ரன் (116 பந்து), பெய்லி 66 ரன் (54 பந்து), ஹக்கஸ் 51 ரன் (63 பந்து) எடுத்து அசத்தினர். கடின இலக்கே சேஸ் செய்த தென் ஆப்ரிக்கா அணியும் அசராமல் விளாசியது. 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டு பிளஸ்சிஸ், டி வில்லியர்ஸ் இருவருமே சதம் அடித்து அமர்க்களப்படுத்தினர். இந்த ஜோடி 256 ரன்களை சேர்த்த நிலையில் டுபிளஸ்சிஸ் 106 ரன் (98 பந்து) எடுத்து ஆட்டமிழந்தார். டிவில்லியர்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றி தேடித்தந்தார். தென் ஆப்ரிக்கா 46.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 328 ரன் எடுத்து வென்றது. டிவில்லியர்ஸ் 136, டுமினி 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

செவ்வாய் கிரகத்தில் இருப்பது எலும்பா? பாறையா? நாசா விஞ்ஞானிகள் ஆய்வு

நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சிக்காக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா, செவ்வாய் கிரகத்துக்கு கியூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலத்தை அனுப்பி வைத்தது. அந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தில் எடுத்த புகைப்படங்களில் ஒன்றில், அங்கு விலங்குகளின் தொடை எலும்புகள் கிடப்பது போன்ற தோற்றம் காணப்பட்டது. அதன்மூலம், டைனோசர்கள் தோன்றி மறைவதற்கு முன்பே, செவ்வாய் கிரகத்தில் பெரியவகை விலங்குகள் உயிர் வாழ்ந்ததாக யூகங்கள் எழுந்தன. இதுபற்றி இணையதளங்களில் பரபரப்பாக கருத்து பரிமாற்றங்கள் நடந்தன. இந்நிலையில், திடீர் திருப்பமாக, அந்த தோற்றம், எலும்பு அல்ல, வெறும் பாறைதான் என்று நாசா விளக்கம் அளித்துள்ளது. காலமாற்றத்தால், பாறைகள் அரிக்கப்பட்டு, அவை புதைபடிவங்களாக கிடப்பதே, எலும்பு போன்று தோன்றுவதாக நாசா கூறியுள்ளது. ஒருவேளை அங்கு உயிரினங்கள் வாழ்ந்திருந்தால் கூட, அவை நுண்ணுயிர் போன்ற சிறிய உயிர்களாகத்தான் இருந்திருக்கும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அரசியலை விட்டே விலக தயார்: ராஜ்ந

புதுடெல்லி : உபி இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் தன் மீது சுமத்தப்படும் புகார்கள் நிரூபிக்கப்பட்டால் அரசியலை விட்டே ஒதுங்க தயார் என ராஜ்நாத் சிங் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உபி இடைத்தேர்தல்: உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் காலியாக உள்ள 11 இடங்களுக்கும், மெயின்புரி மக்களவை தொகுதிக் கும் இடைத்தேர்தல் செப்டம்பர் 13ம்தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் செப்டம்பர் 16 அன்று அறிவிக்கப்படும். இதில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜவும், ரொஹானியா தொகுதியில் அதன் கூட்டணி கட்சியான அப்னா தளமும் போட்டியிடுகின்றன. உத்தரகாண்ட், பீகார், கர்நாடகா என இடைத்தேர்தல்களில் பின்னடைவை சந்தித்த பாஜவுக்கு இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து விட்டது. ராஜ்நாத் மகன் விவகாரம்: மெயின்புரி தொகுதியில் பாஜக வேட்பாளராக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் நிறுத்தப்படுவார் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில், பிரேம் குமார் ஷாக்யாவுக்கு மெயின்புரி தொகுதியை பாஜ மேலிடம் ஒதுக்கியது. நொய்டா சட்டப்பேரவை தொகுதியாவது பங்கஜ் சிங்குக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொழிலதிபர் விமலா பாதமுக்கு நொய்டா ஒதுக்கப்பட்டது. பங்கஜ் சிங்கின் நடவடிக்கை சரியில்லாததால், அவருக்கு சீட் வழங்கப்படவில்லை என்றும், அமித்ஷா தலைமையேற்ற பின்னர், ராஜ்நாத் சிங்கின் செல்வாக்கு முற்றிலும் சரிந்து விட்டது என்றும் பரவலாக பேசப்பட்டது. பிரதமர் அலுவலகம் மறுப்பு: இந்நிலையில், ராஜ்நாத் சிங் மகன் விவகாரத்தில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில வாரங்களாக, ஊடகங்களில் பிரதமர் குறித்தும், சில மத்திய அமைச்சர்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங்கின் நடவடிக்கைகள் சரியில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் அப்பட்டமான பொய்த் தகவல்கள். அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இவை பரப்பப்படுகின்றன’’என்று கூறப்பட்டுள்ளது. அரசியலை விட்டு விலக தயார்: சர்ச்சையை ஏற்படுத்தி வரும் இந்த விவகாரம் தொடர்பாக, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாவை நேற்று சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த 15-20 நாட்களாக என்னைப்பற்றியும், எனது குடும்பத்தினர் குறித்தும் தொடர்ச்சியாக திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்படுகிறது. இவற்றுக்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் கிடையாது. என் மீதோ, எனது குடும்பத்தினர் மீதோ குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், நான் அரசியலை விட்டு வெளியேறுவேன். பொது வாழ்க்கையை கைவிட்டு, வீட்டில் உட்கார்ந்து கொள்வேன் என்று ஆவேசத்துடன் ராஜ்நாத் சிங் கூறினார்.

இந்திய எல்லைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி துப்பாக்கிச்சூடு

காஷ்மீர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பர்ஜ்வால் என்ற இடத்தில் உள்ள இந்திய எல்லைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இருநாட்டு பிரதிநிகளும் நடத்திய கொடி அமர்வு பேச்சுக்கு பின்னர் சிலமணி நேரத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு ஆரம்பித்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிகாலை 6 மணிவரை நடந்தது. இதில் இந்திய தரப்பில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் இந்த தாக்குதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் 87 பேர் கூடுதலாக தேர்வு

நெல்லை : தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 87 பேர் தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு கூடுதலாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் இதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆக.17, 18ம் தேதிகளில் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரி பார்ப்பு பணிகள் முடிந்த போதிலும் ஆசிரியர் நியமனம் தாமதமாகி வந்தது. வெயிட்டேஜ் தொடர்பாக பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் ஆசிரியர் நியமனம் இழுபறியாக இருந்தது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி தகுதித் தேர்வு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்கள் பட்டியலை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதில் தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு மட்டும் பள்ளிக் கல்வித் துறையில் 772 பேர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து கூடுதலாக 87 பேர் தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு ள்ளனர்.

இந்திய - இலங்கை கூட்டுக்குழு நாளை கூடுகிறது

சென்னை : தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை மற்றும் மீனவர்களால் அடிக்கடி தாக்கப்படுகின்றனர். இதை தடுக்க இரு நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இடையிலான கூட்டம் மத்திய அரசின் ஏற்பாட்டின்படி நடந்து வருகிறது. இந்திய - இலங்கை கூட்டுக்குழு கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. இதில், தமிழக அரசு சார்பில் விவாதிக்கப்பட வேண்டியவைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கடந்த திங்கட்கிழமை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அதன்படி, நாளை டெல்லியில் நடைபெறும் கூட்டுக்குழு கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளர் விஜயகுமார், ஆணையர் பீலா ராஜேஷ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள்.இலங்கை அரசின் உயர் அதிகாரிகள் குழுவும் நாளை டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள். இவர்கள், டெல்லியில் வெளியுறவுத்துறை செயலாளர் மட்டத்தில் நியமிக்கப்பட்ட குழு கூட்டத்தில், இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்னை குறித்து பேசி, நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.

சிகிச்சைக்காக மதுரை வந்த நைஜீரிய பெண்ணுக்கு எபோலா

மதுரை : நைஜீரியாவில் இருந்து சிகிச்சைக்காக மதுரை வந்த பெண்ணுக்கு எபோலா வைரஸ் காய்ச்சல் தாக்குதல் இருந்தது பரிசோதனை மூலம் தெரியவந்தது. தகுந்த பாதுகாப்புடன் அவர் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். நைஜீரியாவில் இருந்து சிகிச்சைக்காக மதுரை வந்துள்ள மேலும் 159 பேருக்கு, எபோலா தாக்குதல் உள்ளதா என்பதை கண்டறிய சிறப்பு பரிசோதனைகள் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.ஆப்ரிக்க நாடுகளில் இருந்து ஆட்கொல்லி எபோலா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. எபோலா தாக்குதலை உலகமே அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நைஜீரியா நாட்டை சேர்ந்த 160 பேர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, கண் சிகிச்சை பெறுவதற்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவர்களில் சிலருக்கு திடீரென்று தலை சுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் சந்தேகத்தின் பேரில் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், 39 வயதான பெண் ஒருவருக்கு எபோலா வைரஸ் நோய் அறிகுறி இருப்பதாக தெரிந்தது. விசாரணையில், தனக்கு ஏற்கனவே எச்ஐவி பாதிப்பு உள்ளதாக அந்தப் பெண் தெரிவித்தார். எச்ஐவி உள்ளவர்களை எபோலாக்ஷ் விரைந்து பாதிக்கும் என்பதால் அப்பெண்ணை மிகுந்த பாதுகாப்புடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 159 பேருக்கும் தனியார் மருத்துவமனையில் பொதுவான சோதனை நடத்தப்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் கண் வார்டு அருகே தனித்தனி பகுதியாக 4 படுக்கை வசதிகளுடன் ரூஎபோலாக்ஷ் சிறப்பு சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென டாக்டர்கள் குழுவும் உள்ளது. இப்பிரிவில் நேற்றுமுன்தினம் இரவில் அந்த நைஜீரிய பெண் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரி சென்னை மையத்திற்கு அனுப்பப்பட்டது.எபோலா தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சிறப்பு உடை அணிந்த ஊழியர்கள், டாக்டர்கள் கண்காணிப்பில் அப்பெண் வைக்கப்பட்டிருந்தார். நேற்று மாலை சென்னை மையத்தில் இருந்து ரத்த மாதிரி பரிசோதனை முடிவு வந்தது. அதன் மூலம் அந்த பெண்ணுக்குரூஎபோலோக்ஷ் அறிகுறிகள் உள்ளது உறுதியானது. இருப்பினும் தீவிர பாதிப்பு இல்லை என்பதும் தெரியவந்தது. தனக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளதால், தனது நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு அந்த பெண் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். இதையடுத்து நேற்று மாலை அவர் சென்னை அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து நைஜீரியாவிற்கு உரிய கண்காணிப்புடன் விமானத்தில் அவரை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.இச்சம்பவத்தை தொடர்ந்து மதுரை விமானநிலையத்திற்கு வரும் வெளிநாட்டினர் அனைவருக்கும், சிறப்பு மருத்துவக் குழுவினர் தீவிர மருத்துவ சோதனை நடத்தி வருகின்றனர்.டாக்டர்கள் கூறுகையில், நைஜீரியாவை விட தமிழகத்தில் மருத்துவ சிகிச்சை கட்டணம் குறைவு. இதனால் அங்கிருந்து சிகிச்சைக்காக ஏராளமானோர் தமிழகம் வருகின்றனர். இதற்கென மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களில் மருத்துவ ஏஜென்டுகளும் உள்ளனர். ஆன்லைன் பதிவு வசதிகளும் உள்ளன. திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் நைஜீரியாவில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். அங்கு குறைந்த அளவு சேதமடைந்த பனியன்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் சென்று, தங்கள் நாட்டில் விற்பனை செய்து, லாபம் பார்க்கின்றனர். விசா முடிந்த பின்னரும் சட்ட விரோதமாக நைஜீரியர்கள் பலர் திருப்பூரில் தங்கியுள்ளனர். எபோலா உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்கள் தமிழகத்தில் காலூன்ற இது வழி வகுக்கிறது, என்றனர்

பல கோடி சொத்துகளை இழந்தார் சொந்த வீட்டை விட்டு நடிகர் கார்த்திக் வெளியேறினார்

சென்னை : தமிழ்ப் படவுலகில் முன்னணி ஹீரோவாக இருந்தவர் கார்த்திக். மறைந்த பிரபல நடிகர் முத்துராமனின் மகன். இவர், சோலைக்குயில் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ராகினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 மகன்கள். அதில் ஒருவரான கவுதம் கார்த்திக், கடல் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். பிறகு என்னமோ ஏதோ படத்தில் நடித்தார். தற்போது வை ராஜா வை, சிப்பாய், இந்திரஜித் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கார்த்திக்கும் அனேகன் உட்பட ஓரிரு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.சென்னை ஆழ்வார்பேட்டையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள முத்துராமனின் வீடுகள் மற்றும் வணிக வளாகம் இருக்கிறது. முத்துராமனின் பூர்வீக வீட்டில் கார்த்திக் வசித்து வந்தார். அங்குதான் முத்துராமனின் மனைவி சுலோசனா மற்றும் குடும்பத்தினர் வசித்தனர்.சமீபகாலமாக கார்த்திக் குடும்பத்தினரிடையே சொத்து தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கார்த்திக், அந்த வீட்டை விட்டு வெளியேறும்படி நிர்ப்பந்திக்கப்பட்டதாக தெரிகிறது. சொத்துகளில் எனக்கும் பங்கு இருக்கிறது. நான் ஏன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்? என்று அவர்களிடம் கார்த்திக் விவாதித்ததாகவும், இதையடுத்து அவர்களிடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது கார்த்திக்கிடம், சொத்துகள் பற்றிய விவரங்கள் காட்டப்பட்டதாம். அதில் அவரது பெயர் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர், தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து வருத்தமடைந்து, அவர்களிடம் சண்டை போட்டாராம். அப்போது சொத்துகளில் தனக்கும் பங்கு உண்டு என்று சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த வீட்டை விட்டு அவர் வெளியேற்றப்பட்டதாகவும், சொந்தங்களால் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் திரையுலகில் தனக்கு நெருக்கமானவர்களிடம் கார்த்திக் கூறியதாக தெரிகிறது.இதுகுறித்து கார்த்திக் தரப்பில் தொடர்புகொண்டபோது, உரிய பதில் கிடைக்கவில்லை. அவரது மகனும், நடிகருமான கவுதம் கார்த்திக் செல்போனுக்கு தொடர்புகொண்டபோது, அவர் போனை எடுக்கவில்லை.இதையடுத்து திரையுலகில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் வருமாறு: முத்துராமன், சுலோசனா தம்பதியருக்கு கார்த்திக் தவிர இன்னொரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். முத்துராமன் திடீரென்று மரணம் அடைந்த பிறகு அவரது சொத்துகள் முழுவதும் சுலோசனா வசம் இருந்தது. இந்நிலையில், சொத்து சம்பந்தமாக ஏற்பட்ட தகராறு காரணமாக கார்த்திக் உரிமை கோரியபோது, உயிலில் அவரது பெயர் இல்லை என்ற உண்மை தெரிந்திருக்கிறது. இதற்கு யார் காரணம் என்று தெரியவில்லை. பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, பல வருடங்களுக்கு முன் யாருக்கும் தெரியாமல் தன் பெயரில் எழுதி வைத்துக்கொண்டவர் பற்றி அறிந்த கார்த்திக், அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சினிமாவில் நடித்து சம்பாதித்துக் கொள்வதாக நெருங்கிய நண்பர்களிடம் சொன்ன கார்த்திக், வீட்டை விட்டு அவராகவே வெளியேறி விட்டாராம்.இந்த விவகாரம் குறித்து இதுவரை கார்த்திக் பேட்டி அளிக்கவில்லை. மேலும், அவரது தரப்பில் இருந்து அறிக்கையும் அனுப்பவில்லை. மேலும், கார்த்திக்கின் மூத்த சகோதரர் என்று சொல்லப்படுபவரும் இந்த விஷயம் குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை.கார்த்திக் ஏமாற்றப்பட்ட விவகாரம், தமிழ்த் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு ஐஐடி மூலம் புதுமையான தீர்வு: பிரதமர்

புது தில்லி, ஆக. 23 மக்கள் தினசரி வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதுமையான தீர்வுகளை அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி ஐஐடி நிறுவனங்களை கேட்டுக்கொண்டார். தில்லியில் நடந்த மாநாட்டில் பேசியபோது இதனை தெரிவித்தார். அறிவியல் உலகளாவியது ! ஆனால், தொழில்நுட்பம் நமக்கேற்றால் போல் இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். ஐஐடி-கள் மாணவர்களுக்கு பாடப் பணிகள் அளிக்கும்போது நமக்கு தேவையானவற்றை மனதில் கொண்டு அளிக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் படிக்கும்போது, புதுமையான தீர்வுகளை கண்டுபிடிப்பர். இது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்று கூறினார். பாதுகாப்பு துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் பெரும்பாலும் இறக்குமதியை நம்பி உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் இந்நிலை மாறவேண்டும் என்றார். ரூபாய் நோட்டுகளின் மை, கண்ணீர் எரிவாயு உட்பட பல முக்கிய பொருட்கள் இறக்குமதியை நம்பியே உள்ளது. இவற்றை உருவாக்கும் திறமை இந்தியாவில் இல்லை என்பதை நான் நம்ப மறுக்கிறேன், என்று பிரதமர் தெரிவித்தார். அனைவருக்கு வீடு என்ற கனவை நினைவாக்க ஐஐடி-கள் பங்களிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்காத, குறைந்த செலவில் வலிமையான வீடுகளை கட்ட தொழில்நுட்பம் கொண்டுவர ஐஐடிகள் உதவ வேண்டும் என்று கூறினார். அதோடு, ஐஐடி-கள் தங்கள் அருகில் உள்ள பொறியல் கல்லூரிகளை தத்தெடுத்து அவர்களுக்கு வழிகாட்டியாக திகழ வேண்டும் என்று கூறினார். அது வளர்ச்சிக்கு ஒரு தூண்டுதலாக அமையும் என்றார். ஐ.ஐ.டி-யர்களை மாபெரும் சக்தி என்று விவரித்த பிரதமர் ஐஐடிகள் தங்கள் முன்னாள் மாணவர்கள் தற்போதுள்ள மாணவர்களுடன் கலந்துதுறையாடும் வாய்ப்பை உருவாக்க வேண்டும். அதன்மூலம் பல்வேறு துறைகளில் அவர் அவருக்கு உள்ள அணுபவங்களை பரிமாறிக்கொள்ள முடியும். உலக தரவரிசை முக்கியம், அதேபோல் தரவரிசைக்காக நமக்கு நாமே சொந்த மதிப்புகளை அமைக்க வேண்டும். அது மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் நமக்கு நாமே உருவாக்கி செயல்முறையாக உதவி புரியும்.இவ்வாறு பிரதமர் மோடி விழாவில் பேசினார்.

நாட்டின் வளர்ச்சியானது அனைத்து பகுதிகளிலும் சரிசமமாக இருக்க வேண்டும்: மோடி வலியுறுத்தல்

புது தில்லி, ஆக. 23 இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக மாற நாட்டின் எந்த பகுதியும் பலவீனமாகவோ வளர்ச்சி பெறாமலே இருக்க கூடாது. இந்தியாவின் கிழக்கு பகுதி இன்னும் வளர்ச்சியடையாமலே உள்ளது. வளர்ச்சி என்பது மேற்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு என எல்லா பகுதிகளிலும் சரிசமமாக இருக்க வேண்டும். அப்போழுது தான் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் வளர்ச்சியின் பயனை சமமாக அடைய முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி ராஞ்சியில், தேசிய கணினி கல்வியறிவு இயக்கத்தை தொடங்கி வைத்து பேசுகையில் தெரிவித்தார். அப்பொழுது, ஜாசிதியில் உள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்தையும் ராஞ்சி-தர்மஜய்கார்- சிபாத் 765 கிலோ வாட் மின்வழி தடத்தையும் தேசத்திற்கு பிரதமர் அர்ப்பணித்தார். கிழக்கு இந்தியாவிற்கு முக்கிய எரிசக்தி மையமாக விளங்க உள்ள ஜக்தீஷ்பூர் - பூல்பர் ஹல்டியா எரிவாயு வழி தடத்தின் வேலைகள் விரைவாக ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.வடகிழக்கு கரண்பூரா சிறப்பு அனல்மின் உலையின் வேலைகலை தொடங்கி வைத்த பிரதமர் ஜார்கண்ட் மாநிலத்தை இருட்டில் இருந்து இந்த அனல்மின் உலை மீட்கும் என்று தெரிவித்தார். இரண்டு தகவல் தொழில் நுட்பம் சார்ந்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர், ஜார்கண்ட் மாநிலத்தில் வளச்சிக்கான திறன் அதிகமாக உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் மக்களின் அன்புக்கு, வளர்ச்சி மூலமே தனது அன்பை அளிப்பதாக தெரிவித்தார். இந்தியா வளர்ச்சி அடைய எல்லா மாநிலங்களும் வளர வேண்டும். கணிமத்திற்கான ஆதாய உரிமை விகிதம் (ராயல்டி ரேட்ஸ்) உயர்த்துவது குறித்து அமைச்சரவை முடிவை சுட்டிகாட்டிய பிரதமர் இந்த முடிவு ஜார்கண்ட் மாநிலத்திற்கு பெறும் அளவில் உதவும் என்று தெரிவித்தார்.

கங்கையை தூய்மைப்படுத்த அமைச்சகங்கள் இணைந்து பணியாற்ற முடிவு

புது தில்லி, ஆக. 23 கங்கையை தூய்மைப்படுத்துதல் திட்டத்திற்காக மத்திய நீர் வளங்கள் அமைச்சகமும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகமும் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளது. மத்திய நீர்வள அமைச்சர் உமா பாரதியும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கரும் சந்தித்து பேசியபோது இந்த முடிவு எடுக்கப்பட்டது. கங்கை நதியில் தொழிற்சாலை கழிவுகளின் பாதிப்பை பரிசோதித்து, அதன் சுற்றுச்சூழலை பாதுகாப்பதை இந்த அமைச்சகங்கள் உறுதி செய்யும். கங்கை கரையின் 130 கி.மீ சுற்றளவில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளன. இந்த தடையை கடுமையாக கண்காணிக்க இரு அமைச்சகங்களும் முடிவெடுத்துள்ளது.

83 நாடுகளுடன் அறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம்

புது தில்லி, ஆக.23 ஐரோப்பிய நாடுகள் உட்பட மொத்தம் 83 நாடுக¼ளாடு இந்திய அறிவியல் தொழில்நுட்ப கழகம் ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது நாம் அறிவியல் தொழில்நுட்ப ஒப்பந்தத்தை 45 நாடுகளுடன் இணைந்து தீவிரமாக கூட்டு ஆராய்ச்சி செய்துவருகிறோம். இது இந்த மாதம் 6ம் தேதியின் நிலவரமாகும். அதன்படி 2013ம் ஆண்டு இந்தியாவில் மொத்த 66,580 ஆராய்ச்சி கட்டுரைகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில், 28,551 ஆராய்ச்சி கட்டுரைகள் சர்வதேச கூட்டு ஆராச்சி மூலமாக எழுதப்பட்டது. இந்திய-ஆப்ரிக்கா அமைப்பு மாநாட்டில் இந்திய அரசு ஆப்பிரிக்க நாடுகளுடன் அறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு முயற்சியை தொடங்கியுள்ளது. இதன் மூலம் வளரும் நாடுகளில் விஞ்ஞான ஆராய்ச்சி பயிற்சிக்காக இந்திய நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். இதோடு ஆஸ்திரேலியா, ஜெர்மனி, அங்கேரி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து அர்பணிக்கப்பட்ட ஒன்றிணைந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கூட்டு நிதி நிறுவப்பட்டுள்ளது. கூடுதலாக, கூட்டுத்திட்டம் சார்ந்த நடவடிக்கைகள், இருதரப்பு பயிற்சி வகுப்புகள், வெளிநாட்டில் உள்ள பெரிய அறிவியல் வசதிகளை அணுகவும் அரசு துணைபுரிகிறது.

காக்ரா மற்றும் ரப்தியில் அதிக வெள்ள பெருக்கு

புது தில்லி, ஆக. 23 பீகாரில் உள்ள சிவான் மாவட்டத்தில் உள்ள காக்ரா நதியில் வெள்ளம் அதிக அளவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு அளவு 61.74 மீட்டர். தற்போது 0.32 மீட்டம் மட்டுமே குறைவாக வெள்ளப்பெருக்கு உள்ளது. அதேபோல் காங்பூரில் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள 58.01 மீட்டர் வெள்ளப்பெருக்கு அளவைவிட 0.16 மீட்டர் குறைவாக வெள்ளப்பெருக்கு உள்ளது. உத்திரபிரதேசம் பல்ராம்பூரில் உள்ள ரப்தி நதியிலம் வெள்ளப் பெருக்கு உருவாகியுள்ளது. இங்கு இதுவரை அதிகபட்ச அளவாக 105.25 மீட்டர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 104.62 மீட்டர் குறைவாக வெள்ளப்பெருக்கு காணப்படுகிறது.

அறிவு சார் பொருளாதார நிலை இந்தியா முழுவதும் 2018ம் ஆண்டு வரை அமலாக்கப்படும்

புது தில்லி, ஆக.23 பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அண்மையில் நடைப்பெற்ற மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் டிஜிட்டல் இந்தியா- அறிவு சார் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் முறை அதிகாரம் அளித்தல் சமூக மாற்றத்திற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. பிரதமருடன் கடந்த 7ம் தேதி நடைப்பெற்ற டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்த சந்திப்பின்போது இந்த முக்கிய திட்டத்தை உருவாக்குவதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இந்த மாபெரும் திட்டத்தின் மூலம் அரசாங்கத்தில் அனைத்து சேவைகளும் எல்லோருக்கும் சென்று அடையும் வகையில் அனைத்து அம்சங்களையும் ஆராய இந்த கூட்டம் நடைப்பெற்றது. இந்த திட்டம் மின்னனுவியல் தகவல் தொழில்நுட்ப துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியாவிற்கான இந்த திட்டம் சமூகத்திற்கு கணினி மூலம் அதிகாரம் அளிக்கவும் அறிவு சார் பொருளாதார நிலை நாடு முழுவதும் ஏற்படுத்துவதையும் நோக்கமாக கொண்டது. இத்திட்டம் இந்த ஆண்டு முதல் பல்வேறு கட்டங்களாக 2018 ஆண்டு வரை அமலாக்கப்படும். அனைத்து அரசு சேவைகளும் கணினி வழியாக அனைத்து குடிமக்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்யும். அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு கிடைத்துள்ளது என்பதை உறுதி செய்வதை இதன் மூலம் கட்டாயமாக்கப்படும். பிரத்யோக அடையாள அட்டை அடிப்படையாகக் கொண்டு இது செயல்படுத்தப்படும். மத்திய அரசின் அமைச்சகங்கள் துறைகள் மற்றும் மாநில அரசுகளின் நிதி ஒதுக்கிடு மூலம் இந்த திட்டத்திற்கு தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பின்வரும் துறைகளில் டிஜிட்டல் இந்தியா திட்டம் செயல்படுத்தப்படும். 1. ஒவ்வொரு குடிமகனுக்கும் பயன்பாட்டுக்கான உள்கட்டமைப்பு: அ. அனைத்து கிராம பஞ்சாயித்துகளிலும் அதிவேக இணையதளவசதி. ஆ. பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்திற்கும் கணினி மையமான அடையாளம். இ. தனிப்பட்ட நிலையில் வங்கி கணக்கு, கைபேசி ஆகியவற்றை கொண்டு கணினி வசதிகளை பயன் படுத்துதல். ஈ. அந்தந்த பகுதிகளில் எளிதாக பயன்படுத்துவதற்கு பொது சேவை மையம். உ. பொது மக்களுக்கு தனித்தனியாக பயன்பாட்டுக்கான தனி வசதி ஊ. நாடு முழுவதும் பாதுகாப்பான இணைய பயன்பாட்டு வசதி ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள்கள் ஆகும்.

கோவையில் கஃபே காஃபி டே விழா

கோவை, ஆக.23 இந்தியாவின் மிகப்பெரிய சில்லரை காஃபி சங்கித்தொடர் நிறுவனமான கஃபே காஃபி டே நுகர்வோர்களுக்கான நடத்தும் செயல்விளக்க முன்முயற்சி நிகழ்வு காஃபி விழா ஆகும். காஃபி பிரூ செய்யும் கலையை பகிரவும் மற்றும் தேனீர் பிரூயிங் செய்தல் குறித்த சில குறிப்புக வழங்கும் வகையிலும் நுகர்வோர்களுடன் இணைய காஃபி விழாவை நடத்துகிறது. கோயம்புத்தூரில் நேற்று துவங்கப்பட்ட இந்த விழா 14 செப்டம்பர் 2014 வரை, சுமார் ஒரு மாதம் வரை நடத்தப்படுகிறது. கோவை ரேஸ் கோர்ஸ்ல் அமைந்துள்ள சிசிடி கஃபேவில் காஃபி திருவிழாவின் முதல் நிகழ்வு நடைபெற்றது. புரூக்ஃபீல்டு ஷாப்பிங் மாலில் உள்ள சிசிடி அவுட்லெட் மற்றும் ரேஸ் கோர்ஸ் சாலையிலுள்ள சிசிடி அவுட்லெட் என இரண்டு சிசிடி கஃபேக்கள் இந்த விழாவை ஒரு மாதம் முழுவதும் நடத்தும். நுகர்வோர்கள் இந்த இரண்டு அவுட்லெட்களில் ஏதற்கு வேண்டுமானாலும் சென்று, ஃபிரெஞ்சு எக்ஸ்பிரஸ் மற்றும் ஸ்டவ்டாப் எஸ்பிரஸோ போன்ற எளிமையான காஃபி தயாரிப்பு சாதனங்க பயன்படுத்தி, தங்களது வீட்டிலிருந்துபடியே சொகுசாக காஃபி தயார் செய்வது குறித்து கற்கலாம். இதற்கு கூடுதலாக, காஃபி டே வேக்கப் என்னும் கேப்ஸ்யூல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் காஃபி பிரூயிங் அமைப்பு, வெறும் 30 நொடிகளில் ஒரு கோப்பை காஃபியை உற்பத்தி செய்வதையும் கண்டுகளிக்கலாம். தேனீர்கப் பொருத்தவரை, டீடிரிப் பேக் முறையின் வழியாக, உயர் தரம் வாய்ந்த தேனீரை தங்களது வீட்டிலிருந்துபடியே சொகுசாக தயாரிப்பது எப்படி என்பது குறித்து கற்கலாம். இந்த காஃபி விழாவை துவக்கி வைத்துப் பேசிய, கஃபே காஃபி டேவின், காஃபி எவான்ஜலிஸ்ட் மெர்லின் ராஜ், நமது தினசரி வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக காஃபி மற்றும் தேனீர் அருந்துதல் திகழ்கிறது மற்றும் நாங்கள் இக்கலையின் சார்பான பெறும் கோரிக்கைகள் இப்போக்கிற்கு ஆதாரமாகும். இப்பானங்கள், குறிப்பாக காஃபி, கஃபேகள் மற்றும் வீடுகள் என பல்வேறு இடங்களில் பேச்சுவார்த்தைகளின் மையமாகத் திகழ்கிறது. இத்தகைய சிறந்த பானங்கள் குறித்து வாடிக்கையாளர்கள் கூடுதலாக அறிவதையும் மற்றும் தங்களது கஃபே அனுபவத்தின் ஒரு பகுதியை வீட்டிற்கு கொண்டு செல்வதையும் சாத்தியமாக்கும் வகையில் நாங்கள் மேற்கொள்ளும் முயற்சியே இந்த காஃபி விழாக்களாகும் என்று கூறினார்.

டெல் சாம்ப்ஸ் 2014 போட்டியில் மதுரை மாணவன் வெற்றி

மதுரை, ஆக.23 டெல் இந்தியா, எல்லாவற்றுக்கும் தொழில்நுட்பத் தீர்வுக வழங்குவதில் இந்தியாவில் முன்னிலையில் உள்ள டெல் இந்தியா, மதுரைமாநகர அளவிலான டெல் சாம்ப்ஸ் 2014 வெற்றியாளரை அறிவித்துள்ளது. இந்த வருடம் இந்நிறுவனம் சார்பில் நடத்திய போட்டியில் மதுரையிலுள்ள மகாத்மா மெட்ரிகுலேசன் மாண்டிசரி பள்ளியிலிருந்து ஆர்.தக்சினும் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2014 செப்டம்பரில் நடத்தப்படும் தேசிய இறுதி போட்டியில் தமதுரையின் சார்பாக தக்சினும் அவருடன் அவரது தந்தை கே.ராஜபாண்டியனும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். டெல் சாம்ப்ஸ்2014 திட்டமானது வினாடி வினா போட்டி கலந்து செயல்படக்கூடிய தொழில்நுட்பத்தை அம்சமாகக் கொண்டது, தமது குழந்தையுடன் பங்குகொண்டு குழந்தையின் வெற்றிக்கு துணையாகும் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு தளத்தை பெற்றேர்களுக்கு வழங்குகிறது. போட்டியானது மதுரையில் 20 மாநகரப் பள்ளிகளில் நிகழ்த்தப்பட்டது, ஏறத்தாழ 2114 மாணவர்கயும் 538 பெற்றோர்கச் சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது

மும்பையில் 150வது கிளையைத் துவங்கியது டாக்டர் பத்ராஸ் மருத்துவனை

மும்பை, ஆக.23 உலகின் மிகப்பெரிய ஹோமியோபதி மருத்துவ நிறுவனமான டாக்டர் பத்ராஸ் மருத்துவனை நெட்வொர்க் தனது 150வது கியை மும்பையில் அண்மையில் திறந்து புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. மேலும் இதுவரை 10 லட்சம் நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதையும் பத்ராஸ் கொண்டாடியது. இந்திய ஹோமியோபதி மருத்துவத் துறையின் முன்னோடியான டாக்டர் முகேஷ் பத்ராஸ், 1982ல் மும்பையில் பத்ராஸ் பாஸிடிவ் யஹல்த் கிளீனிக் பிரைவேட் லிமிடெட்டை தொடங்கினார். இதுவரை சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பத்ராஸ் சிகிச்சை அளித்துள்ளது. இந்த சிகிச்சைகளில் 94 சதவீதம் அளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இன்றைய நிலையில் உலகின் மிகப் பெரிய ஹோமியோபதி கிளீனிக் நெட்வொர்க் ஆக பத்ராஸ் பாஸிடிவ் யஹல்த் கிளினீக் அபரிதமாக வளர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் 77 நகரங்களில் பத்ராஸ் ஹோமியோபதி கிளினீக்குகள் செயல்படுகின்றன. இவை தவிர துபாய், பிரிட்டனிலும் கிகள் உள்ளன. உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரத்தின்படி, உலகின் 2வது மிகப் பெரிய மருத்துவ முறையாக ஹோமியோபதி விளங்குகிறது. இந்த மருத்துவத்தை உலகம் முழுவதும் சுமார் 50 கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 2017ம் ஆண்டில் உலகளாவிய அளவில் ஹோமியோபதி மருத்துவத் துறையின் வர்த்தகம் ரூ.52,000 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அலோபதி மருத்துவத் துறையில் 1315 சதவீத வளர்ச்சி மட்டுமே உள்ள நிலையில் ஹோமியோபதி மருத்துவத் துறையில் 25 30 சதவீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பான்மையான மக்கள் இப்போது ஹோமியோபதி மருத்துவத்துக்கு மாறி வருகின்றனர். பாதுகாப்பான, மிகச் சிறந்த தீர்வளிக்கும் மருத்துவமாக ஹோமியோபதி விளங்குவதே இதற்கு காரணம் ஆகும். மும்பையில் நடைபெற்ற 150வது கி திறப்பு விழாவில் பத்ராஸ் பாஸிடிவ் யஹல்த் கிளினீக் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் முகேஷ் பத்ரா கூறியபோது, மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை அளிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இந்த நிறுவனத்தை தொடங்கினேன். குறைவான மருத்துவச் செலவு, பாதுகாப்பான, நல்ல பயனளிக்கும் மருந்துகள், நவீன தொழில்நுட்பம் ஆகியவை ஹோமியோபதியின் சிறப்பு அம்சங்கள் ஆகும். ஒரு கிளினீக்கில் தொடங்கிய எங்களின் பாதை இன்று 150 கிளினீக்குகளாக ஆலமரம் போல் விழுதுக பரப்பி இந்தியா முழுவதும் விரிவடைந்துள்ளது. எங்களின் எல்லை விரிவாகிக் கொண்டே செல்லும் என்று இந்தநேரத்தில் பெருமிதத்துடன் அறிவித்துக் கொள்கிறேன். வரும் டிசம்பர் இறுதிக்குள் மேலும் 25 கிளினீக்குகள் தொடங்கப்படும். அதன் மூலம் மேலும், மேலும் ஏராளமான மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்றார்.

புதிய எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்களை அறிமுகப்படுத்தும் ஹூண்டாய்

புது தில்லி, ஆக.23 புதிய காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. எக்ஸ்சென்ட் காம்பேக்ட் செடான், புதிய எலைட் ஐ20 கார்களை அறிமுகம் செய்த அந்த நிறுவனம் தொடர்ந்து புதிய செக்மென்ட்டுகளில் கார்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் துணைத்தலைவர் ராகேஷ் ஸ்ரீவத்சவா கூறுகையில், இந்த ஆண்டிலிருந்து இதுவரை இடம்பெறாத புதிய செக்மென்ட்டுகளில் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய துவங்கியுள்¼ளாம். வரும் ஆண்டுகளிலும் இதுபோன்று புதிய செக்மென்ட்டுகளில் கார் மாடல்களை அறிமுகம் செய்ய உள்¼ளாம். அதிக வரவேற்பு இருக்கும் காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் எம்பிவி மார்க்கெட்டுகளிலும் புதிய மாடல்களுடன் களமிறக்க உள்¼ளாம், என்று கூறினார். அடுத்த ஆண்டு முதலாவதாக புதிய காம்பேக்ட் எஸ்யூவியை ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதைத் தொடர்ந்து, புதிய எம்பிவி மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ரெனோ டஸ்ட்டர் போன்ற எஸ்யூவி மாடல்களுக்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி நேரடி போட்டியாக இருக்கும். இதேபோன்று, மாருதி எர்டிகா, ஹோண்டா மொபிலியோ கார்களுக்கு ஹூண்டாயின் புதிய எம்பிவி மாடல் போட்டியை தரும்.

கூடுதல் ரேஞ்ச், பவர் ஸ்டீயரிங்குடன் புதிய மஹிந்திரா இ2ஓ எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

புது தில்லி, ஆக.23 கூடுதல் சிறப்பம்சங்களுடன் மஹிந்திரா இ2ஓ எலெக்ட்ரிக் காரின் பிரிமியம் மாடல் விற்பனைக்கு வரப்பட்டுள்ளது. இ2ஓ பிரிமியம் என்ற பெயரில் இந்த புதிய மாடல் அழைக்கப்படுகிறது. புதிய இ2ஓ எலெக்ட்ரிக் காரின் முக்கிய அம்சமாக இதன் ரேஞ்ச் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. தவிர, ஏராளமான சிறப்பம்சங்கள் கொண்ட எலெக்ட்ரிக் காராகவும் உள்ளது. இ2ஓ எலெக்ட்ரிக் காரின் 80 கி.மீ தூரம் வரை இருந்த ரேஞ்ச் இப்போது, ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 120 கி.மீ தூரம் செல்லும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. பவர் ஸ்டீயரிங் இல்லை என்ற குறை போக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய மாடலில் எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பெண் வாடிக்கையாளர்களை எளிதாக கவர முடியும். இதுதவிர, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவர் இன்பர்மே­ன் சிஸ்டம் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்ப வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. தில்லி, மும்பை, புனே மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் கூடுதல் பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றும் நிலையங்களை நிறுவவுவதற்கு மஹிந்திரா முடிவு செய்துள்ளது. தற்போது இந்த நகரங்களில் 300 சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் புதிதாக 100 சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க முடிவு செய்துள்ளது. குட்பை ஃப்யூல், ஹலோ எலெக்ட்ரிக் என்ற புதிய பேட்டரி வாடகை திட்டத்தின் கீழ் இந்த புதிய மாடல் கிடைக்கும். காருக்கான விலையை மட்டும் செலுத்திக் கொண்டு பேட்டரிக்காக மாதாமாதம் பராமரிப்பு கட்டணம் செலுத்தும் விதத்தில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, புதிய இ2ஓ பிரிமியம் எலெக்ட்ரிக் கார் மாடல் ரூ.5.72 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கும். பேட்டரிக்காக மாதாமாதம் ரூ.2,999 செலுத்த வேண்டும். இந்த வாடகைத் திட்டத்தின்படி 50,000 கிமீ அல்லது 5 ஆண்டுகளுக்கு பேட்டரியை பயன்படுத்த முடியும்.

ஒரே ஆர்டரில் 120 சி கிளாஸ் கார்களை சப்ளை செய்தது மெர்சிடிஸ் பென்ஸ்

புது தில்லி, ஆக.23 கார்ஸ்ஆன் ரென்ட் வாடகை டாக்சி நிறுவனத்திடமிருந்து ஆர்டரின் பேரில் 120 சி கிளாஸ் செகுசு கார்களை மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் சப்ளை செய்துள்ளது. வாடகை கார் சேவை துறையில் முன்னிலை வகிக்கும் கார்ஸ்ஆன் ரென்ட் நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் முயற்சிகளை செய்து வருகிறது. மேலும், சொகுசு கார் சேவையை விரிவுப்படுத்தவும் முடிவு செய்தது. தற்போது 800 சொகுசு கார்களை வைத்திருக்கும் இந்நிறுவனம் புதிதாக 120 புதிய சொகுசு கார்களை வாங்குவதற்கு திட்டமிட்டது. இதற்கான, ஆர்டரை சொகுசு தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் மெர்சிடிஸ்பென்ஸ் இந்தியா நிறுவனத்திடம் வழங்கியது. இதன்படி, 120 சி கிளாஸ் கார்களை கார்ஸ்ஆன் ரென்ட் நிறுவனத்துக்கு மெர்சிடிஸ்பென்ஸ் நிறுவனம் ஒப்படைத்தது. மெர்சிடிஸ்பென்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ஆர்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது. கார்ஸ்ஆன் ரென்ட் நிறுவனத்துக்கு சி கிளாஸ் காரின் சி220சிடிஐ என்ற டீசல் மாடல் சப்ளை செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் 2,143சிசி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 170 பிஎச்பி ஆற்றலை வழங்க வல்ல இந்த டீசல் எஞ்சின் லிட்டருக்கு 14083 கி.மீ மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டது.

ஒய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளை இந்திய நிறுவனங்கள் பணியில் அமர்த்த அருண் ஜேட்லி வலியுறுத்தல்

புது தில்லி, ஆக.23 மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சரான அருண் ஜேட்லி ராணுவத்தில் இருந்து ஒய்வு பெற்ற அதிகாரிகளுக்கு உதவும் வகையில், இந்திய நிறுவனங்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப முன்னாள் ராணுவ வீரர்களை பணியில் அமர்த்திக்கொள்ள வலியுறுத்தினார். இதன் மூலம் நிறுவனங்கள் இவர்களிடம் இருந்து சிறப்பான சேவையை பெற முடியும் எனவும் அவர் தெரிவித்தார். இந்திய நிறுவனங்களுக்கு பயிற்சி பெற்ற, ஒழுக்கமான பணியாட்கள் தேவை, இதற்கு முன்னாள் ராணுவ வீரர்கள் மிகவும் பொருத்தமானவர்கள். அவர்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுபவர்கள் மட்டுமன்றி ஒழுக்கத்திலும் சிறந்தவர்கள், கடினமான சூழ்நிலையிலும் சிறப்பாக சேவையாற்றக் கூடியவர்கள் என அருண் ஜேட்லி கூறினார். தொழில் துறை அமைப்பு , ராணுவம் இரண்டும் இணைந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மறுவாழ்வு இயக்குநரக அமைப்பு மூலம் வேலைவாய்ப்பு வழங்கும் எனவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். ராணுவத்தில் பணியாற்றுபவர்களில் அதிகமானோர் குறைந்த வயதிலேயே பணியில் இருந்து ஓய்வுபெற்று விடுகிறார்கள், ஆனால் அவர்கள் ஒருபோதும் சோர்வதில்லை, வாழ்க்கையில் அயராது முன்னேறத் துடிக்கிறார்கள் எனவும் அவர் கூறினார். நாடு முழுவதும் ராணுவ முகாம்கள் உள்ள பகுதிகள் மற்ற இடங்களை விட சிறப்பான முறையில் பாரமரிக்கப்பட்டு வருகின்றன மற்றும் சாதாரண குடிமக்களின் கட்டடங்களை விட ராணுவ வீரர்களின் கட்டடங்கள் சிறப்பாக வடிவமைக்கப்படுகின்றன, இதிலிருந்து ராணுவ வீரர்களின் சிறந்த முகாமைத்துவ நடைமுறைகளைப் பார்க்க முடிகிறது என ஜேட்லி கூறினார். எனவே தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவன சமூகப் பொறுப்பை முன்னெடுத்துச் செல்வதற்கு முன்னாள் ராணுவ வீரர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் என ஜேட்லி கூறினார். ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்தில் பணிபுரியும் சுமார் 60 ஆயிரம் பேர் ஓய்வு பெறுகின்றனர், இதில் 44% பேர் 40-50 வயதுக்கு உட்பட்டவர்கள், 33% பேர் 35‡40 வயதுக்கு உட்பட்டவர்கள், மேலும் 12 சதவிகிதத்தினர் 30‡35 வயதிலே பணியிலிருந்து விலகி விடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் சில செய்திகளை காண்பிக்கவும்

தலையங்கம்

 • ** முறையற்ற முடிவுகளும் முடங்கிவிட்ட தொழில்களும் **

  கோல்கேட் என்று அழைக்கப்படுகிற நிலக்கரி சுரங்க ஊழல் குறித்து இந்தியத் தலைமைக் கணக்காயர் குற்றம் சாட்டியபோது அரசுக்கு இழப்பு ரூ.1.86 லட்சம் கோடியாக இருக்கும் என்று தெரிவித்தபோது அப்போதைய அரசு அதை கடுமையாக மறுத்தது. சுரங்கங்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கும்போது இழப்பு எப்படி ஏற்படும் என்றே வாதித்தது. ஆனால் இப்போது உச்சநீதிமன்றம் 1993 முதல் 2010 வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள் அனைத்தும் முறைகேடாக ஒதுக்கப்பட்டவையே என்று அறிவித்துள்ள நிலையில் இழப்பு ஊர்ஜிதமாக்கப்பட்டுள்ளதுதான் உண்மை. எந்த அளவுக்கு என்பதில் வேண்டுமானால் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தேசியவளத்தை எந்தவிதமான வெளிப்படையான அளவுகோல்களோ மதிப்பீடுகளோ இல்லாமல் தான்தோன்றித்தனமாக தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளதைத்தான் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. திறன் ஆராயும் குழு என்ற ஒன்றை நியமித்து அதன்மூலம் பல்வேறு நிலக்கரி சுரங்கத் தொகுப்புகள் முறைகேடாக பல நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்போது அதில் ஊழல் இல்லாது இருக்குமா என்கிற அடிப்படைக் கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. கிட்டத்தட்ட 218 சுரங்கத் தொகுப்புகள் அப்போது ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் பலவற்றில் இன்னும் வேலைகளே துவங்கப்படவில்லை. கேப்டிவ் மைனிங் என்று சொல்லப்படும் மின்சாரத் திட்டங்களுக்கான நிலக்கரியைத் தாங்களே தோண்டி எடுத்துக் கொள்வது என்கிற அடிப்படையில் ஆன திட்டங்களில் சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட நிலக்கரி மின்னுற்பத்தி அல்லாத வேறு வர்த்தக முறையில் சம்பந்தப்பட்ட வேறு வர்த்தக நடவடிக்கைகளுக்கு நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் குறித்த விண்ணப்பங்களை ஆராய்ந்த குழு சரிவர சிந்திக்காமல், வெளிப்படையான தன்மை இல்லாமல், ஒழுங்கு முறைகளைப் பற்றிய கவலை இல்லாமல் தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் கடுமையாகச் சாடியுள்ளது. விதிமீறல்களை மட்டும் தவறாமல் கடைப்பிடித்துள்ளதாகவும் அது குற்றஞ்சாட்டியுள்ளது. பல்வேறு விண்ணப்பங்களில் 10 நிறுவனங்களை மட்டும் தேர்ந்தெடுத்து ஒதுக்கீடுகள் பாரபட்சமாக வழங்கப்பட்டுள்ளதால் இந்த ஒதுக்கீடுகள் முறைகேடானவை என்று அறிவித்துள்ள உச்சநீதிமன்றம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முற்றிலும் அவை ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முடிவெடுக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படித்தான் அலைக்கற்றை ஊழலும் முதலில் ஒன்றுமே நடக்கவில்லை என்று கூறப்பட்டாலும் பின்னர் படிப்படியாக ஊழல் பூதங்கள் புறப்பட்டு வந்ததும் யாவரும் அறிந்ததே. இந்நிலையில் முறைகேடாக ஒதுக்கீடு பெற்றதாகக் கூறப்படும் நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பலத்த அடி வாங்கியுள்ளன. இது இயற்கையானதே. ஏற்கெனவே பொருளாதார மந்தகதிச் சூழல் தொடர்வதற்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்பட்டது சுரங்கத்துறையின் செயல்பாடுகள்தான் என்றால், மின்சாரத் துறையின் செயல்பாடுகளோ மெச்சத்தக்க வகையில்தான் இருந்து வந்தது என்பதும் உண்மையே. இந்நிலையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில் சுரங்கத்துறை, மின்சாரத்துறை இரண்டிலும் ஒரு நிச்சயமற்ற நிலை குறைந்த காலத்திற்காக ஏற்படுவது தவிர்க்க இயலாததாகி உள்ளது. ஆனால் அதற்காக ஊழல் பொறுத்துக்கொள்ளப்பட வேண்டும் என யாரும் விரும்பமாட்டார்கள். மாறாக இத்தீர்ப்புக்குப் பின்னராவது இத்தகைய தேசிய சொத்துக்களை ஏல முறையில் குறிப்பிட்ட நெறிமுறைகளுக்குட்பட்டு ஒதுக்கீடு செய்வது கட்டாயமாக்கப்படுமானால் அது வரவேற்கத்தக்கதாகவே அமையும். புதிய அரசும்கூட இத்தீர்ப்பை வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இனி தெளிவான வரைமுறைகளுடன் கூடிய நடவடிக்கைகள் மூலம் சுரங்கத்துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்த முடியும் என நிலக்கரி துறை அமைச்சர் பியுஸ் கோயல் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அதேநேரம் பெரும் முதலீடுகள் பல நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ளும் என அறிவிக்கப்பட்டிருப்பது நியாயமானதே. ஒதுக்கீடு பெற்றுவிட்டு சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்கும் நிறுவனங்கள் இனி சந்தை விலைக்கு மறு ஏலம் கேட்பதன் மூலமே இத்தகைய சுரங்கங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும் என்றே தோன்றுகிறது. அதுதான் நியாயமானதும்கூட. - எம்.ஜே.வாசுதேவன்

பங்கு சந்தை

 • Stock Exchange

  பெடரல் பேங்க் பெடரல் பேங்க் பங்குகள் தற்போது வாங்க வேண்டிய பங்குகளில் உள்ளது. இப்பங்கானது த

 • Stock Exchange

  அப்போலோ டயர்ஸ் அப்போலோ டயர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வர்த்தகர்களிடையே அதிகம் பேசப்படும் ப

 • Stock Exchange

  ஆதித்யா பிர்லா ஆதித்யா பிர்லா பங்குகள் வர்த்தகம் உயர்வதற்கான சிக்னல் தெரிகிறதாம். இப்பங்க

 • Stock Exchange

  சாஸ்கன் சாஸ்கன் பங்குகள் வாங்க வேண்டிய பட்டியலில் வந்துள்ளதாம். இப்பங்கானது தற்போதைய விலை

 • Stock Exchange

  டாடா மோட்டார்ஸ் டாடா மோட்டார்ஸ் பங்குகள் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்ற பங்குகளில் ஒன்றாக உ

உணவு பொருட்கள்

ஆபரணங்கள் சந்தை